அருவி (2017)

குறிப்பு: படத்தின் முக்கிய கதைக்கரு புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருவி – சமீபத்தில் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கிய திரைப்படம். கிட்டத்தட்ட அனைத்து இணைய ஊடங்கங்களும் கொண்டாடி கொண்டிருந்ததை காண முடிந்தது. விமர்சனங்களால்  ஏற்படும் அதிகப்படியான கதை கசிவினால் படம் பார்க்கும் போது தொய்வு ஏற்படக்கூடாதென முடிவெடுத்து படம் பற்றி எதுவும் படிக்காமல் முன்னோட்டத்தை மட்டும் பார்த்து வைத்திருந்தேன்.  இன்று ஒரு திரையரங்கில் காண முடிந்தது.

படத்தின் தொடக்கத்தில் ஒரு தீவிரவாதியாக குற்றச்சாட்டப்பட்டு காவல்துறையின் பிடியில் இருக்கிறாள் அருவி . அவளை விசாரிக்கும் தீவிரவாத தடுப்புத் துறையின் ஆணையர் அவள் சொல்லும் பதிலை கேட்டு ஓங்கி அறைகிறார். அவளது தோழி எமிலியுடன் தொடங்கி பல பேர்களை விசாரிக்கிறார்கள். அவர்கள் கூறும் வாக்குமூலங்களில் அவளின் கதை மலையில் தொடங்கி நம் மனத்தரையில் அருவியாய் கொட்டித்தீர்க்கிறது.

குறும்புப்பெண்ணாக வளரும் அருவி, கிராமப்புறத்தில் இருந்து நகரத்திற்கு மாறும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை போல் அருவியின் குடும்பமும் இடம்பெயருகிறது. தனது கல்லூரிப் பருவத்தில் நண்பர்களுடன் பார்ட்டிகளுக்கு செல்கிறாள்.  துடிப்புடன் இருக்கும் அவள்  குடித்து பழகிக்கொள்கிறாள். திடீரென உடல் உபாதைகள் அவளை சூழவே அவள் மேல் சந்தேகமடையும் பெற்றோர் அவளை வீட்டை விட்டு துரத்திவிடுகின்றனர்.

கல்லூரித்தோழி அவளுக்கு உறைவிடம் கொடுத்து ஆதரவளிக்கிறாள். ஒரு அரசியல்வாதி உதவியினால்  தையல் பயிற்சிக்கொடுத்து வேலைக்கு சேர்கிறாள். அவளுக்கு உதவிய அரசியல்வாதி, கல்லூரித்தோழியின் தந்தை, ஒரு ஆன்மிக ஆசாமி ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள். சொல்வதல்லாம் சத்தியம் என்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிக்கு எமிலியுடன் செல்கிறாள். சென்று சம்பந்தப்பட்ட இந்த மூவரும் அவர்கள் செய்ததிற்கு மன்னிப்பு கேட்க வேண்டுகிறாள்.

கல்லூரித்தோழியின் தந்தை குற்ற உணர்வுடன் மன்னிப்பு கேட்கிறார். அரசியல்வாதியும் ஆன்மிக ஆசாமியும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என பதறிப்போகிறார்கள். தொலைக்காட்சி நிலையத்தில் வைத்தே அவர்களுக்கு சோதனை செய்யப்படுகிறது. மூவருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை என்று முடிவுகள் வருகின்றது. ஆனால் அதை மறைத்து நிகழ்ச்சியை நீட்ட முடிவெடுக்கிறார்கள்.

முதலில் தொகுப்பாளினி அருவியின் பக்கத்தில் இருக்கும் நியாயம் பற்றி பேசுகிறார். நோய்த்தொற்றினால் ஏற்படும் பால்வினை நோய் அருவியை தாக்கி இருப்பதை அறிந்த பின் அப்படியே தட்டை திருப்பி போட்டு நீயெல்லாம் ஒரு பெண்ணா, நோய் இருப்பது தெரிந்தே அவர்களுடன் உறவு வைத்து கொண்டுள்ளாயே என்று கேட்கிறார்.

தொலைக்காட்சி நிலையக்காரர்கள் அவர்களை வைத்து மனதளவில் கபடி ஆடுகிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களிடம் உண்மையை சொல்லிவிட்டு கிளம்புகிறாள் அருவி. அவளை செல்ல விட்டுருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும்.

அடுத்து நடக்கும் ஒரு கொலைவெறி தாக்குதலை தொலைக்காட்சி ஊழியர்கள் இரக்கமே இல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிக்கு பயன்படுத்த நினைக்கிறார்கள். அங்கு ஆரம்பிக்கிறது பிணைக்கைதி நிகழ்ச்சி, அது அருவியையும் எமிலியையும் தொலைக்காட்சி ஊழியர்களையும் எங்கு கொண்டு சேர்க்கிறது என்பது தான் மீதிக்கதை.

ஒரு சமுதாயம் சார்ந்த அல்லது அரசியல் பேசும் படமாக இருக்கக்கூடும் என்று முன்னோட்டத்தை வைத்து நினைத்திருந்தேன். முழுக்க ஒரு பெண்ணின் வாழ்வு சார்ந்த சமுதாயத்தின் பார்வை படம் முழுக்க நீள்கிறது. திருநங்கை (எமிலியை) விமர்சிக்கும் அந்த எடுபுடி முதல் அருவியை விமர்சிக்கும் அந்த தொகுப்பாளினி, அவர் சமுதாயத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் எடுக்கும் போது சமுதாயம் பணத்தின் மேல்கொண்டிருக்கும் பிணைப்பையும் அதற்கு நாம் எவ்வாறு தயார்படுத்தப் பெற்றிருக்கிறோம் என்பதையும் சவுக்கடி பதிலாக கொடுக்கிறாள் அருவி.

அருவி வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறாள் என்று தெரிந்தும் சமூகம் கட்டமைத்துள்ள பெண் சார்ந்த சட்டதிட்டங்கள் பெண்களைக் கூட மாற்றி வைத்துள்ளதை தொகுப்பாளினியின் மூலம் உணரமுடிகிறது.

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியை கதைக்கரு சாதனமாக உருவாக்கி இருக்கிறார்கள், இதற்கான காட்சியமைப்புகளை நன்றாகவே விலாவாரியாக செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருக்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தையும் அதில் பணிபுரியும் தொகுப்பாளினியையம் பிம்பப்பத்தியது ஏன் என்று விளங்கவில்லை.

Foreshadowing எனப்படும் முன்கூட்டியே குறிப்புணர்த்தும் உத்தி இப்படத்தில் நன்றாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டாமை கதையினை நிராகரிக்கும் அருவி, நாட்டாமையாக இருக்கும் தொகுப்பாளினி இதற்கு சிறு உதாரணங்கள்.

குடும்ப சச்சரவுகளை நான்கு சுவர்களுக்குள் அல்லது உற்றார் உறவினர்களை வைத்து தீர்க்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியை வைத்து தீர்க்க முடியுமா என்று தொகுப்பாளினியை பாத்திரநடிப்பு செய்ய வைக்கப்படும்போது அதிலிருக்கும் அதன் அபத்தத்தை அவருக்கு உணர வைக்கிறாள் அருவி.

இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டவர்கள் சூழ்நிலையாலோ அல்லது தெரிந்தோ குடும்பத்தினரே அவர்களை தனிமைப்படுத்திய பின் எதிர்கொள்ளும் மனநிலையும் உணரும்படி படம் முடிந்து விடுகிறது. கடைசி நொடியில் வரும் அந்த சிரிப்பு ஏனோ சஹானாவின் நினைவை கீறிவிட்டது.

கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் பொது கொரிய நாட்டு படங்கள் சிலவற்றை ஒரு சில இணையதள பட்டியல்களில்  பிடித்து பார்த்து கொண்டிருந்தேன். அந்த படங்களில் ஒன்று தான் லவ் போபியா .  கவித்துவமான காதல் கதைகளை கொடுப்பதில் வல்லவர்கள் கொரியர்கள். சாதாரண கதையையும் உருக வைக்கும் கதையினிலும் எளிதாக கடத்துகிறார்கள்.

குழந்தை பருவத்தில் ஒரு மஞ்சள் மழையங்கியை எப்போதும் அணிந்து கொண்டு இருக்கும் ஒரு குட்டிப்பெண்ணுடன் நட்பில், பின் காதலில் விழுகிறான், கதையின் நாயகன். அவள் சொல்லும் அனைத்து அசட்டு கதைகளையும் முழுதாக நம்புகிறான். மற்ற குழந்தைகளிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்தி கொள்கிறாள் குட்டிப்பெண் ஆரி. மீண்டும் மீண்டும் அவளை சந்திக்க நேரிடும் கணங்களில் ஒரு முறை அவனுக்கு தட்டம்மை காய்ச்சல் அவளிடம் இருந்து பிடித்து கொள்கிறது. அத்துடன் அவன் வாழ்க்கையில் இருந்து மறைந்து போகிறாள். அவளை தேடி கண்டுபிடித்து அவள் பற்றிய உண்மைகளை கண்டறிய முற்படும் போது தான் நோய்த்தொற்று அவளை எளிதாக கொன்றுவிடும் என்று அவள் தன்னையே தனிமைப்படுத்தி கொண்டிருந்ததை புரிந்து கொள்கிறான்.  அவளுடைய இறுதி ஆசையினை எவ்வாறு நிறைவேற்றுகிறான் என்பது மீதிக்கதை.

இந்த படத்தில் குழந்தையாக இருக்கும் போது  ஆரி ஆரி டிங் டிங் என்று பாடி கொண்டே இருப்பாள். ஆரி என்று தமிழில் ஒரு நடிகர் இருக்கிறார் அல்லவா? அவர் பெயர் வரும்போதெல்லாம் இந்த படத்தின் நினைவு வந்துபோகும்.

8 Replies to “அருவி (2017)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *